‘நீடித்திருப்பதும் குறைவாகவே விளங்கிக்கொள்ளப்பட்டதுமான, இலங்கைத்தீவின் ஈழத்தமிழர் சிக்கலுக்கு இத்தைகயதொரு புதிய அணுகுமுறையை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்” என்றார் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதிதாகநியமிக்கப்பட்டுள்ள பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர், செல்வராசா பத்மநாதன்.
வெள்ளியன்று அமெரிக்க அரச செயலர் ஹிலாறி கிளின்ரன் விடுத்தஅறிக்கை குறித்து “தமிழ்நெற்” இணையத்தளம் அவரைத் தொடர்பு கொண்டபோது அவர் இவ்வாறுகூறினார்.
“உடனடியான போர்நிறுத்தம் என்பது பொதுமக்கள் மீதானபடுகொலைகளை நிறுத்துவதுடன் பாதிக்கப்பட்ட மக்களால் மேலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய வகையில் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வழிவகுக்கும்” என்றார் திரு. பத்மநாதன் .
“இலங்கையின் எல்லாஇனக்குழுக்களதும் எதிர்பார்ப்புகளை சந்திக்கும் வகையிலான தீர்வொன்றை உருவாக்க முனைகையில், கடுந்துயர் ஒருபுறமும் பேராசை மறுபுறமும் இருப்பதை முறைவழுவாமல் எடை போட்டுக் கொள்ளவேண்டும் ” என்று மேலும் அவர் தெரிவித்தார்.
‘எல்லா இனக்குழுக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் ஒத்திசையவேண்டும்’ என்பது ஒற்றையாட்சி சூழ்ந்த சிறிலங்கா அரசமைப்பின் அணுகுமுறை. தமிழ்த் தேசிய எதிர்பார்ப்புக்களை மறுதலிக்கவே இந்த அணுகுமுறை கையாளப்பட்டிருப்பதற்கு வரலாறு உண்டு என்றுகுறிப்பிட்டார் பத்மநாதன்.
“கடந்தகாலத்தில் பல தடவைகள் தமிழர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். சிங்களத் தலைமைமீது அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது. முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மிகுந்த கவனம் எடுக்கும் முறைதவறா அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்பது எங்கள் உண்மையான எதிர்பார்ப்பு,” என்றும் அவர் கூறினார்.
‘மனிதக்கேடயம்’ தொடர்பான கேள்வி குறித்துப் பேசுகையில், வன்னிப் பொதுமக்கள் இக்கேள்வி குறித்து உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை உலக நாடுகள் சுயமாகவும் நேரடியாகவும் அறிந்து அளவிட வேண்டுமென்பதையே தான் வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.
ஹிலாறி கிளின்ரன் தேர்தல் காலத்தில் கூறியதற்கு அமைய, இலங்கைத் தீவின் சிக்கல் குறித்து ஆர்வம் எடுத்துக் கொள்வதற்காக அவருக்குத் தனிப்பட்ட நன்றி தெரிவித்த பத்மநாதன், தமிழர் ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பிருந்தே தமிழ்ப் பொதுமக்களை குறிவைப்பவர்கள் என்று நன்கு அறியப்பட்ட சிங்கள ஆயுதப் படைகளின் கரங்களில் தற்போது தமிழர்கள் படும் கடுங்கொடுமையை அமெரிக்காவினால் தடுக்க முடியும் என்றார்.
பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தியிருப்பதும், விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழேவைக்குமாறு வலியுறுத்தாது விட்டிருப்பதும் முக்கிய அணுகுமுறை மாற்றம் என்பது பத்மநாதனின் தொனியாக இருந்தது.
சிக்கலுக்கு முடிவுகாணும் வகையில் முறைவழுவா அணுகுமுறை எங்கிருந்து வரினும்,அமைதியும் கடும் உழைப்பும் கொண்ட தமிழ்க் குமுகத்தின் இயல்பு அதற்கு ஈடுசெய்யக்கூடியது என்பதும் அவரது தொனியாக இருந்தது.