சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் அவசியமென்றால் தமது விதிமுறைகளை அரசாங்கம் பின்பற்ற வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வரும் அகதிகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக நடத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி வழங்கும் நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் அரசாங்கப் பிரதிநிதிகள் நாளைய தினம் நடாத்தவுள்ள சந்திப்பின் போது இந்த விடயங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என அறிவிக்கப்படுகிறது.
இடம்பெயர் மக்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த சர்வதேச விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை ஏற்கனவே அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிரேஸ்ட அதிகாரி வோல்டர் கெலின் தெரிவித்துள்ளார்.
யுத்த வலயத்தில் சிக்குண்டு அல்லலுறும் அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் தற்போது தற்காலிக முகாம்களில் சரணடைந்துள்ள பொதுமக்களை மீள தமது சொந்த இடங்களில் குடியமர்த்தல் போன்றவை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அகதிகள் தொடர்பில் சர்வதேச சட்ட விதிகள் கடுமையான பின்பற்றப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த மாதத்தைவிட இந்த மாதத்தில் அகதிகளின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் உணவு, குடிநீர் மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் அரசாங்கம் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ரஜீவி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே, அகதிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு சர்வதேச நாடுகளின் உதவி பெரிதும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=9096&cat=1