பாதுகாப்பு வலயத்தில் என்ன நடந்தது என்பது சர்வதேச சமூகத்திற்கு தெரியும் மோதல் இடம்பெற்ற பிரதேசங்களிலும் பாதுகாப்பு வலயத்திலும் என்ன நடந்ததென்று சர்வதேச சமூகத்திற்குத் தெரியும் என்று தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபட் ஓ பிளேக், சகல சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகாரப் பகிர்வை முன்வைப்பதற்கான நல்லதொரு ஆரம்பம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
கொழும்பு,கோல்பேஸ் ஹோட்டலில் இன்று புதன்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இலங்கையில் கடமையை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் ரொபட் ஓ பிளேக் இன்று இறுதி செய்தியாளர் மாநாட்டை நடாத்தினார்.
அங்கு செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்ததாவது;
இலங்கை முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கின்றது கிழக்கை புலிகளிடமிருந்து மீட்ட போது பதவிக்கு வந்த நான் வடக்கு கிழக்கை முழுமையாக மீட்கப்பட்டதாக ஜனாதிபதி அறிவித்திருக்கின்ற நிலையில் விலகிசெல்கின்றேன். இது பலவற்றிக்கு நல்ல ஆரம்பமாகும்.
கடந்த 26 வருட இனமோதலின் பின்னர் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு ஐ.நாவின் நிறுவனங்கள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் என்பன உதவிகளை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
இவ்வாறானதொரு நிலையில் அரசாங்கம் சகல இனங்களை சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகார பகிர்வை முன்வைத்து வெளிப்படையான கருத்தாடல்களை செய்யவேண்டும் இதற்கு அமெரிக்கா அரசாங்கமும் உதவும்.
மோதல் இடம்பெற்ற பகுதிகள் மற்றும் பாதுகாப்பு வலயத்தில் என்ன நடந்ததென்று சர்வதேச சமூகத்திற்கு தெரியும் அவை தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளது.
நலன்புரி நிலையங்களில் வாழ்கின்ற மக்களின் மேம்பாடுகளுக்கு அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு நல்கும் அதேநேரத்தில் பிரிதானியா,பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் அவர்களின் மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் அவர்கள் நிதியுதவி கொடுத்து உதவலாம் அது அரசாங்கத்திற்கு பெரும் உதவியாக அமையும் என்றார்.
http://paranthan.com/index.php?option=com_content&view=article&id=548:2009-05-20-18-01-13&catid=34:2009-04-30-04-35-39&Itemid=53