இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் தமது இலக்குகளை அடைவதிலேயே அக்கறை காட்டுகிறார்களே தவிர போர் வலயத்துள் அகப்பட்டிருக்கும் ஒன்றரை இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள் பற்றி அக்கறை காட்டுகிறார்கள் இல்லை என்று ஊடகவியலாளரான சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
றியல் நியூஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த செவ்வியில் கருத்து வெளியிட்ட அவர் அரசாங்கம் சொல்வது போல இது ஒரு பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமல்ல. புலிகளிடமிருந்து பயங்கரவாதம் வெளிப்படுகிறது என்று சொல்லலாம். ஆனால் அதேவேளை இது ஒரு அரசியல் பிரச்சினையும் கூட. இதுவரை இருந்த எல்லா அரசாங்கங்களும் இராணுவத் தீர்வுடன் ஒரு அரசியல் தீர்வையும் வலியுறுத்தி வந்தன. ஆனால் இந்த அரசாங்கம் தனியே இராணுவத் தீர்வு பற்றி மட்டுமே சிந்தி;க்கிறது. இது ஒரு இராணுவப் பிரச்சினை பயங்கரவாதப் பிரச்சினை என்று ஒரு ஒற்றைப் பார்வையை மட்டுமே இந்த அரசாங்கம் கொண்டுள்ளது. இது தான் மற்றைய அரசாங்கங்களைவிட இந்த அரசாங்கத்தின் பிரதான வேறுபாடு.
விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் அங்குள்ள மக்களை வெளியேற விடுகிறார்களில்லை. அவர்கள் வெளியேறினால் புலிகளது பாதுகாப்பு பிரச்சினைக்குரியதாகிவிடும். அதேவேளை அரசாங்கமும் அந்த மக்களுடைய பாதுகாப்பு குறித்து அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை. அரசாங்கம் பதவிக்கு வரும் போது சொன்னது போல வடக்கை முழுமையாகக் கைப்பற்றி இராணுவ ரீதியாக ஒன்றிணைக்க முயல்கின்றது. அது தான் அரசாங்கத்தின் இலக்காக இருக்கின்றது.
அரசாங்கம் அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றுவதா இல்லையா என்பது பற்றியதல்ல எனது பிரச்சினை. அங்குள்ள மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அவசியமானது. அதற்கு எல்லோராலும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
இரண்டு தரப்புமே போரை நிறுத்தி போருக்குள் அகப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவத் தேவைகள் கிடைக்க உடனடியாக ஆவன செய்தல் வேண்டும். எதிரிகளை நடாத்துவது போலல்லாமல் புலிகளின் உறுப்பினர்கள் போலக் கருதாமல் சொந்த நாட்டு மக்களை நடாத்துவது போல நடாத்துதல் வேண்டும். இலங்கை அரசாங்கம் சர்வதேச மனிதாபிமானச்சட்டங்களை ஏற்று அதன்படி நடத்தல் வேண்டும். விடுதலைப் புலிகள் அப்பிரதேசத்திலிருந்து மக்களை வெளியேற விடுவதாக இல்லை. அது அவர்களுடைய உத்தியோகபூர்வ முடிவு. விடுதலைப் புலிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. அது ஒரு கெரில்லா அமைப்பு மட்டுமே. எனினும் நாங்கள் எல்லோரும் அந்த மக்கள் குறித்து அவர்களை மனிதக் கேடயங்களாகப் பாவிக்க வேண்டாமென்று வலியுறுத்த வேண்டும். அதேவேளை நாம் அரசாங்கத்தையே தெரிவு செய்தோம். மக்களால் தெரிவு செய்யப்படட்ட அரசாங்கத்தற்குப் பொறுப்பு அதிகம் இருத்தல் வேண்டும்.
ஆனால் எங்களுக்குக் கிடைக்கின்ற தகவல்களின்படி அது கத்தோலிக்க தேவாலய வழியாக வந்தாலென்ன தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடாக வந்தாலென்ன சர்வதேச சமூகத்துடாக மருத்துவ அறிக்கைகள் மூலமாக வந்தாலென்ன எல்லாமே இலங்கையின்; வரலாற்றில் காணாத மனித அவலம் அங்கு ஏற்பட்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன.
இறுதியாக இருந்த ஒரேயொரு வைத்தியசாலையும் மூடப்பட்டு விட்டது. அங்குள்ள மக்களுக்குப் போதுமான உணவு வசதியோ மருத்துவசதிகளோ குறைந்தபட்சம் காயப்பட்டவர்களுக்கு மருந்து கட்ட பண்டேஜ் துணிகளோ கூட இல்லை. சராசரியாக நாளாந்தம் ஐம்பது மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். உணவு விநியோகம் சீராக இல்லை. மருத்துவ விநியோகம் முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
இவை பற்றி வெளிப்படையான கலந்துரையாடல்கள் நாட்டில் இல்லை. சுதந்திரமாக ஊடகவியலாளர்கள் சென்று அறிக்கையிடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கும் அப்பகுதிக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வெறுமனே இரண்டு தரப்பினருடைய அறிக்கைகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கடந்த மூன்று வருடங்களாக எதிர்பாராதபடி ஊடகத்துறை பெரும் அச்சுறுத்தல்களையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொண்டு வருகிறது. கடந்த மூன்று வருடத்தில் 20 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
50க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உயிரச்சம் அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார்கள். 20 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்ட 3 மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் சிலர் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள். பத்திரிகை நிறுவனங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றன. ஊடக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன. சில நிறுவனங்கள் பலாத்காரமாக மூடப்பட்டுள்ளன.
ஜனவரி 8ஆம் திகதி சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதனையடுத்து 35 ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்;.
http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=7379&cat=1