முதலாவது “டுவென்டி-20′ போட்டியில் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்காவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்றது. தற்போது இரண்டு “டுவென்டி-20′ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் “டுவென்டி-20′ போட்டி நேற்று முன்தினம் ஜோகனஸ் பர்க்கில் நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி, பீல்டிங் தேர்வு செய்தது.
ஹசி அதிரடி: ஆஸ்திரேலிய அணி துவக்கத்திலேயே மைக்கேல் கிளார்க் (2), கேப்டன் பாண்டிங் (1) விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் டேவிட் ஹசி, வார்னர் இணைந்து அதிரடியாக ஆடினர். ராபின் பீட்டர்சன் வீசிய 10வது ஓவரில் திருப்புமுனை ஏற்பட்டது. இந்த ஓவரில் வார்னர் (38), மைக்கேல் ஹசி (0), ஹாடின் (0) அவுட்டாயினர். மறுமுனையில்
போராடிய டேவிட் ஹசி அரைசதம் கடந்தார். 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் மட்டும் எடுத்தது. டேவிட் ஹசி 44 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தெ.ஆப்ரிக்கா வெற்றி: சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்காவுக்கு கிப்ஸ் அதிரடி துவக்கம் தந்தார். ஆனால் அறிமுக வீரர் கீவ்ஸ், தனது முதல் பந்திலேயே கிப்சை(19) வெளியேற்றினார். 2வது ஓவரின் முதல் பந்தில் டிவிலியர்சை (7) போல்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார். ஆம்லா (26), டுமினியும் (21) அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். ஆனால் பவுச்சர் (36*), மார்கல் (37) ஜோடி கடைசிநேரத்தில் துணிச்சலாக விளையாட, தென் ஆப்ரிக்க அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் டேவிட் ஹசி வென்றார். இரு அணிகள் மோதும் இரண்டாவது “டுவென்டி-20′ போட்டி இன்று செஞ்சுரியனில் நடக்கிறது.