போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற இங்கிலாந்து-மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 121 ரன்களுக்கு இங்கிலாந்தை சுருட்டிய மேற்கிந்திய அணி பிறகு 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பூவாதலையா வென்ற மேற்கிந்திய அணி முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தது. இங்கிலாந்து அணியில் துவக்க வீரர் டேவிஸ் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் ஸ்ட்ராஸ் 22 ரன்களை எடுக்க அதிரடி வீரர் பீட்டர்சன் 12 ரன்களுக்கும், ஓவைஸ் ஷா 6 ரன்களுக்கும், காலிங்வுட் 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 19.1 ஓவர்களில் இங்கிலாந்து 121 ரன்களுக்கு சுருண்டது.
மேற்கிந்திய அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பென் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
மேற்கிந்திய அணி பேட்டிங்கை துவக்கிய போது துவக்க வீரராக களமிறங்கிய ராம் நரேஷ் சர்வாண் 46 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 59 ரன்களை எடுத்தார். இவரது இந்த இன்னிங்ஸ் அணிக்கு வெற்றி தேடித் தந்தது.