மாத்தறை, கொடபிட்டியவில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டதுடன் அமைச்சர் மஹிந்த விஜயசேகர உட்பட 44 பேர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்படுகிறது. அக்குறஸ்ஸ கொடப்பிட்டிய ஜும் ஆ பள்ளிவாசலுக்கு அருகில் இந்தச் சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினமான இன்று மீலாத் வைபவமொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
இந்த மீலாத் வைபவத்தில் அமைச்சர்களான மஹிந்த விஜயசேகர, ஏ.எச்.எம். பௌஸி, மஹிந்த யாப்பா அபேவர்த்தன, எஸ்.எச். அமீர் அலி உட்படப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய இந்தத் தற்கொலைத் தாக்குதலில் தெவிந்தர பிரதேச சபைத் தலைவர் லிண்டன் அபேதீர, அக்குறஸ்ஸ பிரதேச சபையின் உப தலைவர் உபாலி சரத்சந்திர, குபுறுபிட்டிய பிரதேச சபையின் உப தலைவர் திலக் விஜேசேகர, அத்துருலிய பிரதேச சபை உறுப்பினர் அநுரவிக்கிமசிங்க ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இராணுவத்தரப்பு ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவிக்கையில், இது ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலெனத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 44 மேற்படடோர் அக்குறஸ்ஸ, மாத்தறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் விசேட வைத்திய நிபுணர்கள் குழுவொன்று கொழும்பிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அமைச்சர் மஹிந்த விஜயசேகர மேலதிக சிகிச்சைக்காக விசேட ஹெலிக்கப்டர் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.