ஐ.பி.எல். எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய அட்டவணையை தயாரிக்குமாறு ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டிகள் ஏப்ரல் 10ஆம் தேதி துவங்கி, மே 24ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், ஏறத்தாழ அதே காலகட்டத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலும் நடைபெறுவதால் பாதுகாப்புப் பிரச்சினைகள் எழுந்தன.
இதையடுத்து, அட்டவணையை மாற்றுமாறு ஐபிஎல் நிர்வாகத்திடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி, ஐபிஎல் நிர்வாகம் புதிய அட்டவணையை கடந்த 7ஆம் தேதி மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
ஆனால், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், டெல்லி உட்பட பல்வேறு மாநில அரசுகள், போட்டி அட்டவணைகள் தொடர்பாக ஆட்சேபம் வெளியிட்டன. தேர்தல் நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது கடினம் என்றும், கூடுதல் படையினர் தேவை என்றும் தெரிவித்தன. சில மாநில அரசுகள், ஒரு சில போட்டிகளுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்க முடியும் என்று தெரிவித்தன. ஒரு சில மாநிலங்கள், தேர்தல் முடிந்த பிறகுதான் கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்று தெரிவித்தன.
ஆகவே, அதன் பிறகு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐபிஎல் நிர்வாகம் இந்த மாதம் 7ஆம் தேதி சமர்ப்பித்த அட்டவணைப்படி போட்டிகளை நடத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது.
மாநில அரசுகள் தெரிவித்துள்ள கருத்துக்களை கவனத்தில் கொண்டு, புதிய அட்டவணையைத் தயாரிக்குமாறு ஐ.பி.எல். நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டு்ள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.