புலிகள் ஆதரவாளர்களின் சந்தேகங்கள்..!
பிரபாகரன் மரணமடைந்ததாக இலங்கை ராணுவம் அறிவித்த நாளனறு, பத்மநாதன் மறுப்பு தெரிவித்தது மட்டுமின்றி, அவரது உடல் காட்டப்படாததால், சர்ச்சை தொடங்கியது.
மறுதினம்... பிரபாகரன் உடல் என சில வீடியோ காட்சிகளையும், புகைப்படங்களையும் இலங்கை ராணுவம் வெளியிட்டது. ஆனால், சர்ச்சை தொடரும் வகையில் புலிகள் ஆதரவாளர்களால் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
கடந்த 2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப் பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி?; முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்?; கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்?; ஆம்புலன்ஸ்சில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற்கு மாறாக, ஒரு நாளுக்கு முன்பு 12 மணி அளவில் முல்லைத்தீவு நந்திக்கடல் கழிமுக பகுதியில் இருந்து உடலை கண்டுபிடித்ததாக அறிவித்திருந்தது.
தலையின் மேற்பகுதி மறைத்து வைக்கப்பட்டு உள்ளது; பிரபாகரனின் நாடி நடுவில் ஒரு வெட்டு உள்ளது போன்ற இரட்டை நாடி ஆகும். வீடியோ படத்தில் அப்படி இல்லை; பிரபாகரனின் கை சற்று பருமனாக இருக்கும். இந்த படத்தில் அப்படி இல்லை;
இறந்து பல மணி நேரம் ஆகியும் தண்ணீருக்குள் கிடந்த அவருடைய உடல் உப்பவில்லை. படத்தில் காண்பிக்கப்படுவதுபோல், தலையை பொம்மையை போல் அசைக்கமுடியாது என்று தடய அறிவியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்; தலைவரின் முகம் போன்ற ஒன்றை போலியாக பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் செய்து ஒட்டிவிட்டு, அதை மறைக்க யூனிபார்மும், தலையில் துணியும், பாதி உடலும் என்று காட்டுகிறார்கள்...
இதுபோன்ற பல சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பிய புலிகள் ஆதரவாளர்கள், சில விளக்கங்களையும் அளித்தனர். இதனால் பிரபாகரன் மரணம் குறித்த சர்ச்சை நீடித்தது.
இலங்கையில் தமிழர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டதை மறைக்கும் நோக்கத்துடனும், சர்வதேச சமுதாயத்தை திசைதிருப்பும் எண்ணத்துடனும் தான் புலிகள் தலைவர் மரணமடைந்ததாக, இலங்கை அரசு பொய்ப் பிரசாரம் செய்து வருகிறது என்பதே புலிகள் ஆதரவாளர்களின் பிரதான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
பத்மநாதன் அறிக்கையின் பின்னணி?!
பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக வீடியோ வெளியிட்டு, அந்தச் செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடம் ஊடகங்கள் மூலம் கொண்டு சேர்க்கும் வகையில் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அதை உலகத் தமிழர்கள் பலரும் நம்ப மறுப்பதை உணர்ந்த இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிதான் பத்மாநாதனின் அறிக்கை விவகாரம் என்கின்றனர் புலிகள் ஆதரவு தரப்பினர்!
இலங்கை அரசின் ரகசிய திட்டம் பற்றி, கடந்த வெள்ளிக்கிழமை (மே 22) புலிகளின் ஆதரவாளர்களிடம் இருந்து தமிழகத்திலுள்ள சிலருக்கு ஒரு தகவல் கிடைத்தது.
"பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக, உலகத் தமிழர்களை நம்ப வைக்கும் வகையில், புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் மூலமாகவே ஓர் அறிக்கையை வெளியிட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, பத்மநாதனை மிரட்டியும் பல்வேறு நெருக்கடி கொடுத்தும் அவ்வாறு அறிக்கை வெளியிடும் செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. எனவே, பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்று பத்மாநாதன் மூலமாகவே அறிக்கை விரைவில் வெளிவரும்," என்பதே அந்தத் தகவல்!
பத்மநாதன் மூலம் காய்நகர்த்தும் திட்டம் தெரிந்ததன் எதிரொலியாகவே, 'பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்' என்ற செய்தியை விடுதலைப்புலிகளின் வெளிவிவகார உளவுத்துறையின் தலைவர் அறிவழகன் முன்கூட்டியே அறிவித்தார் என புலிகள் ஆதரவாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
அத்துடன், "இந்தச் சூழலின் பின்னணியில் தான் பத்மாதனின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெறும் அறிக்கை மட்டுமே வெளியானால், அதனை புலிகள் ஆதரவு தரப்பு மறுத்துவிடக் கூடும் என்பதால், பத்மநாதனையே நெருக்கடிக்கு ஆளாக்கி, பி.பி.சி. வானொலியுடன் பேசவைத்துள்ளனர்," என்கின்றனர்.
இலங்கை அரசின் இந்த உத்தியின் பின்னணிதான், பழ.நெடுமாறன் மற்றும் வைகோ ஆகியோரின் அறிக்கையில் எதிரொலிக்கிறது.
மேலும், பத்நாதனின் அறிக்கைகளையும் பேட்டிகளையும் தவறாமல் வெளியிட்டு வரும் புலிகளின் தீவிர ஆதரவு இணையதளங்கள், பிரபாகரன் மரணம் பற்றிய பத்மநாதனின் அறிக்கையை கண்டுகொள்ளவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால், பிரபாகரனின் மரணம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி கிடைக்காமல், மர்மங்கள் தொடர்ந்தவண்ணமே இருக்கிறது.