தனது கணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை எந்த விசாரணை தகவலும் வெளியாகவில்லை என்று 'சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரிராக இருந்த லசந்த விக்ரமதுங்கவின் மனைவி சோனாலி விக்ரமதுங்க குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் காவல்துறை தலைமை ஆய்வாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனது கணவரை கொன்றவர்கள் யார் என்பது குறித்து அமைச்சர் கேகலிய ரம்புக்வெல்லேவுக்கும் அதிபர் ராஜபக்ஷேவுக்கும் நிச்சயம் தெரியும். 'டெய்லி மிரர்' பத்திரிகைக்கு அமைச்சர் அளித்த பேட்டியில், எனது கணவரின் கொலைத் தொடர்பான விபரங்களை இப்போது வெளியிட முடியாது என்றும், அதுகுறித்து பிப்ரவரி 15ம் தேதி அதிபரே ஊடகத்திற்கு தெரியப்படுத்துவார் என்றும் கூறினார். ஆனால், இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
எனது கணவர் கொல்லப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. பிரேத பரிசோதனை அறிக்கை, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், சந்தேகத்திற்குரியவர்கள் உட்பட புலனாய்வில் கிடைத்த எந்தத் தகவலையும் இன்னும் வெளியிடாமல் உள்ளனர்.
இலங்கை அரசு உடனடியாக அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சோனாலி விக்ரமதுங்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவர் வழக்கறிஞராகவும் பத்திரிகையாளராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks Dinamani