வடக்கு நிலவரம் குறித்து தெளிவுபடுத்தும் முகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்து கொண்ட சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
யாழ்க் குடாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பியினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் அடக்குமுறை தொடர்பில் ஆனந்தசங்கரி ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன் போது அமைச்சர் தேவானந்தா குறுக்கீடு செய்த காரணத்தினால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது.
ஆனந்தசங்கரி, நீ வாயை மூடிக்கொள், நான் ஜனாதிபதியிடமே பேசுகிறேன் என டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கருணா டக்ளஸ் தேவானந்தாவை சமாதானப் படுத்தியதாக குறிப்பிடப்படுகிறது.
வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
வன்னிச் சிவிலியன்களுக்கு போதியளவு உணவு விநியோகம் செய்யப்படுகின்றதா என ஆனந்தசங்கரி இதன் போது ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
80,000 மக்களுக்கு தேவையானளவு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களே அனுப்பி வைக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.paristamil.com/tamilnews/?p=33905