அதிமுக திரட்டிய நிதி, இலங்கைத் தமிழர்களை சென்றடையாமல் தடுப்பதற்கான முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
“”தனிப்பட்ட நபரோ, நிறுவனமோ வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு உதவ, செஞ்சிலுவை சங்கம் மூலமாக மத்திய அரசின் அனுமதி இல்லாமல் நிதி அனுப்ப முடியாது” என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதைப் பார்க்கும்போது அதிமுக சார்பில் திரட்டப்பட்ட நிதி இலங்கைத் தமிழர்களைச் சென்றடையாமல் தடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பது தெளிவாகிறது.
எனக்கும் (ஜெயலலிதா) அதிமுகவுக்கும் கருணாநிதி ஏற்படுத்திய எத்தனையோ தடைகளை நான் முறியடித்துள்ளேன். அதுபோல இந்தத் தடையையும் முறியடித்து இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக திரட்டிய நிதி செஞ்சிலுவை சங்கம் மூலம் அனுப்பப்படும்.
இலங்கைத் தமிழர் பிரச்னையை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு அனைத்துக் கட்சி கூட்டம், எம்.பி.க்களின் ராஜிநாமா கடிதங்களைப் பெறுதல், ராஜிநாமா கடிதங்களை கிழித்துப் போடுதல், மனிதச் சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி, இறுதி வேண்டுகோள் என்ற பெயரில் சட்டப் பேரவையில் தீர்மானம் என்ற பல்வேறு சிரிப்பு நாடகங்களை அரங்கேற்றி இலங்கைத் தமிழர்களின் துன்பத்துக்கு காரணமான கருணாநிதி எனது அறிக்கையை நகைச்சுவை என்று கூறியது கேலிக்குரியதாக உள்ளது.
ஒரே நாளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை விமானம் ஏற்பாடு செய்து அனுப்ப முடியுமா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். எனது உண்ணாவிரத அறிவிப்பு மார்ச் 5-ம் தேதியே வந்துவிட்டது.
எனவே மூன்று நான்கு நாள்களில் அதற்கான ஏற்பாடுகளை தாராளமாகச் செய்யலாம்.
இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்காக மத்திய அரசு ஆயுதங்களையும், அதிநவீன சாதனங்களையும் வழங்கியபோது வாய்திறக்காத கருணாநிதிக்கு இலங்கைத் தமிழர்கள் குறித்து யாரையும் விமர்சிக்க தகுதி இல்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்