யாழ்க் குடாநாட்டில் சிறுவர்கள் கப்பத்திற்காக கடத்தப்படுகின்றமையை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாகக் கண்டிப்பதாக இன்று விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவிகளாகிய இவர்கள் ஆயுதந் தாங்கிய ஆயுததாரிகளால் கடத்தப்படுவதாகவும் அப்பாவிப் பொதுமக்கள இந்த ஆயுதந் தாங்கிய நபர்களுக்குப் பயந்து காவற்துறைக்கு செல்லாது கப்பத்தைச் செலுத்தி வருவதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி குற்றம் சுமத்தியுள்ளது. பெரும்பாலும் பாடசாலை மாணவிகளைக் கடத்திச் செல்லும் ஆயுததாரிகள் திருமலையில் வர்சா மட்டக்களப்பில் தினூசிக்கா ஆகியோருக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என குடும்பத்தவர்களை எச்சரித்திருப்பதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
தமிழர்கள் எனக் கூறிக் கொண்டு ஆயுதங்களை ஏந்தி சாதாரண தமிழர்களை மிரட்டுவதிலும் கப்பம் பெறுவதிலும் கொலைகளை மேற்கொள்வதிலும் தொடர்ச்சியாக இந்தத் தரப்புகள் ஈடுபட்டிருப்பதாகவும் அதனை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது.
ஆயுதக் கலாச்சாரமற்ற ஜனநாயக சூழலொன்றை ஏற்படுத்துவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தில் அனைத்துத் தரப்புக்களும் ஒன்று திரள வேண்டும் எனவும் அது அழைப்பு விடுத்துள்ளது. மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த ஈனச் செயல்களுக்கு முற்றுப் புள்ளி ஏற்படுத்த முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி, குற்றவாளிகள் சிலரை இலங்கை அரசு கைது செய்வதும் பின்னர் அவர்களில் சிலரை ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி சுட்டுக் கொல்வதும் தொடர் கதையாகி விட்டதாகவும் இதன் மூலம் உண்மையான குற்றவாளிகள் மற்றும் சூத்திரதாரிகள் தப்பியோடி விடுவதாகவும் அரசு உண்மையில் குற்றவாளிகளை அம்பலப்படுத்த வெளிவர வேண்டும் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்; வி. ஆனந்தசங்கரி சார்பில் அதன் செயலாளரான சங்கையா என்பவர் ஒப்பமிட்டு குடாநாட்டிலுள்ள ஊடக நிறுவனங்களுக்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே குடாநாட்டில் செயற்பட்டு வருகின்ற சர்வதேச உதவி அமைப்புக்களின் பணியாளர்களிடம் இருந்தும் கப்பம் கோரும் அச்சுறுத்தல்கள் கிட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
www.globaltamilnews.net