பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி வழங்கிய செவ்வி

Go down 
AuthorMessage
baskar

baskar


Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி வழங்கிய செவ்வி Empty
PostSubject: பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி வழங்கிய செவ்வி   பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி வழங்கிய செவ்வி EmptyFri Aug 27, 2010 1:13 pm

ராஜபக்ஷ வரலாம்! நான் வரக் கூடாதா? : பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி – ஆனந்த விகடன்


தமிழர்களைக் கொல்லும் ராஜபக்ஷவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவுக்குள் வரலாம்! விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்துக்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது. இவ்வாறு மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, கூறியுள்ளார்.

பேராசிரியர் இராமசாமி, ‘பினாங்கு ராமசாமி’ என்றே அறியப்படுகிறார். மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர். இலங்கை இன அழிப்புப் போருக்குப் பின்னர் ஈழ மக்களுக்காக சர்வதேச அளவில் ஓங்கி ஒலிக்கும் கோபக் குரல்!

செம்மொழி மாநாட்டுக்கு எதிராக இவர் கொளுத்திப்போட்ட பட்டாசுகள் வெடித்து அடங்குவதற்குள், ‘மகிந்தா ராஜபக்ஷ, கோத்தபாய வரிசையில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், கருணாநிதி ஆகிய மூன்று பேரும் போர்க் குற்றவாளிகளே. இவர்களிடமும் ஐ.நா. விசாரணைக் குழு விசாரணை நடத்த வேண்டும்’ என்று அதிரடி அறிக்கை விட்டிருக்கிறார்.

பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி, ஆனந்த விகடனுக்காக வழங்கிய செவ்வி வருமாறு:

கேள்வி: இந்தியாவுக்குள் உங்களை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதே… என்ன காரணம்?


பதில்: மாநில முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக உள்துறை, இந்திய அரசைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நானும் பார்வதி அம்மாளைப்போல எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறேன். இலங்கையில் ராஜபக்ஷவின் தமிழின அழிப்புப் போரில் இந்திய நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்து வந்தேன்.

இருண்ட மேகம் தமிழர்களைச் சூழ்ந்த வேளையில், துயர் துடைக்க கருணாநிதி எதுவுமே செய்யவில்லை. கவலையோடு ஏதாவது செய்யுங்கள் என்றேன். ஆனால், கருணாநிதிக்கு சொக்கத் தங்கம் சோனியா காந்தியின் கோபத்துக்கு தான் ஆளாகிவிடக் கூடாது என்ற ஒரே கவலை மட்டுமே இருந்தது. அதன் விளைவுதான், அந்தக் கடிதம்.

தமிழர்களைக் கொல்லும் ராஜபக்ஷவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவுக்குள் வரலாம்! விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்துக்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது.

கேள்வி: உங்கள் நண்பர் சீமான் சிறையில் இருக்கிறாரே?

பதில்: மீனவர்களுக்காகக் குரல் கொடுத்ததற்காகத் தம்பியைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதன் பின்னர், இரண்டு முறை சிங்களக் கடற்படை இராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை வெடிவைத்துத் தகர்த்திருக்கிறது. இப்போது மிகத் தந்திரமாக யாழ்ப்பாண மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் சதி நடந்துகொண்டு இருக்கிறது.

இரு நாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகச் செய்திகள் வெளியாகின்றன. பிரச்சினை இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலானதா? இலங்கை அரசுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையிலான பிரச்னையை இவர்கள் இரு நாட்டுத் தமிழ் மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையாகத் திசை திருப்புகிறார்கள். அதற்கு இடைஞ்சலாக இருப்பார் என்பதால்தான், தம்பி சீமானை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கேள்வி: செம்மொழி மாநாட்டுக்கு உங்களை அனுமதிக்கக் கூடாது என்று கடிதம் எழுதுகிற அளவுக்கு உங்களுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் இடையில் என்ன முரண்பாடு?

பதில்: எல்லாத் தமிழர்களையும்போல நானும் ஆரம்பத்தில் கலைஞரை மிகவும் நேசித்தேன். அவர் எழுத்துக்களை விடாமல் படித்தேன். ஆனால், முதலாம் ஈழப் போரின்போதுதான் இவரின் சுயநல அரசியலைப் புரிந்துகொண்டேன். அவருக்கு, தமிழர்கள் பற்றியோ, தமிழ்மொழி பற்றியோ எந்தக் கவலையும் இல்லை.

செம்மொழி மாநாட்டைப் பொறுத்தவரையில் நான் ஏதோ செம்மொழி மாநாட்டுக்கு வருகிறேன்… வருகிறேன் என்று வாசலில் போய் நின்றது போலவும், கருணாநிதி என்னைத் துரத்திவிட்டது போன்றும் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். விருந்து உண்ணுவதில்கூட மானம் பார்க்கிற தமிழன் நான். உலக அளவில் தனக்கு நேர்ந்துள்ள அவப் பெயரைப் போக்க, இனக் கொலை நடந்த ஓர் ஆண்டுக்குள் செம்மொழி பெயரில் இந்த மாநாட்டைத் தன் குடும்ப மாநாடாக நடத்தி முடித்திருக்கிறார்.

ஆனால், தன் மீது விழுந்த களங்கத்தை மாநாடு நடத்தியோ, மயிலாட நடத்தியோ கழுவ முடியாது என்பது முத்தமிழ் அறிஞர் கருணாநிதிக்கு இன்னும் விளங்கவில்லை. இந்த மாநாடு அறிவிக்கப்பட்ட உடனே முதன்முதலாக அதற்கு எதிராகக் குரல் கொடுத்தவன் நான். செம்மொழி மாநாடு நடந்த அதே கோவையில், பல தடைகளைத் தாண்டி டாக்டர் கிருஷ்ணசாமி ஏற்பாடு செய்த மாநாட்டிலும், மதுரையில் நாம் தமிழர் மாநாட்டிலும் பேசினேன்.

புது டெல்லியில் நடைபெற்ற புலம்பெயர்ந்த இந்தியர்களின் மாநாடான ‘பிரவசி பாரதிய திவாஸ்’ மாநாட்டுக்கு எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனிதப் பேரவலத்தில் இந்தியாவின் பங்கைச் சுட்டிக்காட்டி, நான் நிராகரித்தேன்.

இப்படி எதிர்ப்புத் தெரிவித்த என்னை அவமானப்படுத்தும் நோக்கில், வழக்கம் போலக் கடிதம் எழுதினார் கருணாநிதி. மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்தவிதமான தனிப்பட்ட பிரச்சினைகளும் இல்லை.

கேள்வி: பிரபாகரன்தான் என் தலைவர் என்கிறீர்கள், அதற்கு என்ன காரணம்?


பதில்: எனக்கு மட்டுமல்ல… உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்தான். தலைவர் பிரபாகரனை இரு முறை வன்னியில் சந்தித்துள்ளேன். ஈழத் தமிழர்களைப் பற்றியும் உலகத் தமிழர்கள் பற்றியும் நீண்ட நேரம் உரையாடினோம். அவரிடமிருந்து விடைபெறும்போது, தமிழ், தமிழர் நலன் குறித்த தெளிந்த சிந்தனையும் தெளிவான பார்வையோடும் நான் வெளியே வந்தேன்.

பிரபாகரன் எனக்கு ஒரு வழிகாட்டி. சுருக்கமாகச் சொல்லப்போனால், தமிழினத்தின் காவலன் பிரபாகரன். தமிழர் சரித்திரத்தில், 1,000 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அவரைப் போன்ற தீர்க்கதரிசனம் மிக்க தலைவர் தோன்றுவார். தமிழர் சரித்திரத்தில் ஈடு இணையற்ற மாபெரும் தலைவர் அவர்!

கேள்வி: 30-க்கும் மேற்பட்ட நாடுகள், புலிகள் அமைப்பைத் தடை செய்திருக்கும் நிலையில், மலேசியாவில் ஓர் அரசுப் பதவியில் இருக்கும் உங்களது பேச்சு, மலேசிய அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தாதா?

பதில்: கடந்த காலங்களில் ‘தீவிரவாதம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி, பல சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் நசுக்கப்பட்டதை நாம் அறிவோம். அயர்லாந்து புரட்சி இயக்கம், விடுதலைப் புலிகள் இயக்கம், பி.எல்.ஓ. எனப்படும் பாலஸ்தீன சுதந்திர இயக்கம், இப்படிப் பல சுதந்திரப் புரட்சி இயக்கங்களை அவ்வாறுதான் சித்தரித்து ஒடுக்கப்பார்த்தார்கள்.

என்னைப் பொறுத்தவரை, விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய விடுதலை இயக்கம். சிங்கள இனவெறி அரசின் கொலை வெறியாட்டத்தில் இருந்து, இலங்கையில் ஒரு தேசிய இனமான தமிழர்களைக் காப்பாற்றத் தொடங்கப்பட்ட இயக்கம். அவ்வியக்கம், தமிழர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவே விளங்கியது. ஈழத் தமிழர்கள் மட்டும் இன்றி, உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு காவல் அரணாக நம்பிக்கையை ஏற்படுத்தியது விடுதலைப் புலிகள் அமைப்புதான்.

நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்தே, தமிழர்கள் மட்டுமல்லாது, இந்தோனேஷியாவின் ஆச்சே பகுதி மக்கள், பாலஸ்தீனியர்கள் என்று உரிமைக்காகப் போராடும் மக்களுக்காகப் போராடுபவனாகவே இருந்து வந்திருக்கிறேன். இப்போது அரசியலுக்கு வந்து, பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பதவியில் உட்கார்ந்து இருக்கிறேன் என்பதற்காக எனது கொள்கைகளை, எனது போராட்டத்தைக் கைவிட்டுவிட முடியாது!

கேள்வி: கே.பி. கைது, ஈழ அகதிகள் விவகாரங்களில் கொண்டுள்ள அணுகுமுறை போன்றவற்றை வைத்துப்பார்க்கும்போது, மலேசிய அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்று தெரிகிறதே?

பதில்: மலேசியாவில் ஆட்சியில் இருக்கும் அரசும் இனவாத அரசே. அந்த வகையில், சுதந்திர இயக்கங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது அதிசயம் இல்லை. மலேசிய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இணக்கப்பாடின்றி, நெருங்கிய ஒத்துழைப்பு இன்றி, கே.பி-யின் கைது மலேசியாவில் நிகழ்ந்திருக்காது.

பல விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது மலேசிய அரசு. அவ்வாறு நாடு கடத்தப்படும் புலி உறுப்பினர்களை, இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைக்கிறது, சித்திரவதைகள் செய்கிறது.

தமிழ் சுதந்திர இயக்கங்களை ஒடுக்குவதில், இரண்டு அரசுகளும் மிகக் கவனமாக நடந்துவருகின்றன. இன்று வரையிலும் சுமார் 2,000 தமிழ் அகதிகள், மலேசியாவின் குடிநுழைவுத் துறை தடுப்பு முகாம்களில் உள்ளனர். அண்மையில்கூட, சுமார், 75 அகதிகள் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளனர்.

கேள்வி: இந்திய, தமிழக அரசுகளையும், சோனியாவையும் நீங்கள் விமர்சிப்பது, மலேசிய-இந்திய உறவுகளைப் பாதிக்காதா?

பதில்: மகிந்தா ராஜபக்ஷ, கோத்தபய ராஜபக்ஷே போன்று மன்மோகன் சிங், சோனியா காந்தி, ப.சிதம்பரம், கருணாநிதி ஆகியோரும் போர்க் குற்றவாளிகளே.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் குழு, தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக் கொடுமைகள்பற்றி விசாரிக்கும்போது இவர்களையும் விசாரிக்க வேண்டும்.

உங்களுக்குத் தெரியும், ஈழப் போரில் நிகழ்ந்த கொடுமைகளைக் கண்டு, நான் சில தலைவர்களைக் கேள்வி கேட்டதற்கே, எனக்கு இந்தியாவுக்குள் செல்லத் தடை விதித்துள்ளனர்.

கண்டிப்பாக, மலேசிய அரசுக்கு என் நடவடிக்கைகள் எரிச்சலைக் கிளப்பியிருக்கும்தான். அதைப்பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுதான் என் நோக்கம்.

கேள்வி: உங்கள் மாநிலத்துக்கு வந்த இந்தியத் தூதரை நீங்கள் சந்திக்க மறுத்து அவமதித்தது சரியா?

பதில்: எனக்குத் தடை விதித்த இந்திய அரசின் அதிகாரிகளுக்கு நான் மரியாதை கொடுப்பது அவசியம் இல்லை என்று நான் கருதுகிறேன். சமீபத்தில், இந்தியத் தூதர் விஜய் கோகல்லே அவர்களைச் சந்திக்க நான் மறுத்துவிட்டேன். நான் என்ன நினைக்கிறேன் என்றால், மலேசியாவில் உள்ள இந்திய அரசின் அதிகாரிகள் இந்திய அரசாங்கத்தின் பிரசார சாதனங்கள், அவ்வளவுதான்.

கேள்வி: ஐ.நா. விசாரணைக் குழுவின் விசாரணைகள் சரியான வகையில் நடத்தப்படும் என்று கருதுகிறீர்களா?

பதில்: இலங்கையில் நிகழ்ந்த கடும் யுத்தத்தை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது. ஆனால், இன்று பல நாடுகள், மனித உரிமைக் குழுக்கள், தனி நபர்களின் தொடர் அழுத்தத்தால், இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் விசாரணைக் குழு ஒன்றை ஐ.நா. அமைத்துள்ளது. அதன் நடவடிக்கைகள், விசாரணைகள் எந்த அளவுக்கு நடுநிலையாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், இலங்கையில் நிகழ்ந்தது இன அழிப்பு நடவடிக்கைதான் என உலக நாடுகளுக்கும், தலைவர்களுக்கும் புரியவைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன. நாங்களும் இதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டோம்!

கேள்வி: இந்திய அரசு ஈழத் தமிழர் விவகாரத்தில் மட்டுமல்லாது எல்லா தமிழர்கள் விவகாரத்திலும் இப்படித்தான் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டினீர்களே, அது ஏன்?

பதில்: மலேசியாவில் வசித்தாலும் எங்கள் வேர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. எங்களின் மூதாதையர்களில் பலர், இரண்டாம் உலகப் போரில் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து போராடியவர்கள். ஆனால், இந்திய அரசாங்கம் மலேசியத் தமிழர்களை எப்போதோ மறந்துவிட்டது.

எங்கள் துன்பங்களை இந்திய அரசு கண்டுகொண்டதே இல்லை. அதிலும் குறிப்பாக, வட இந்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய நடுவண் அரசு, தமிழர்கள் விவகாரங்களில், அது மலேசியத் தமிழராகட்டும், ஈழத் தமிழராகட்டும், ஓர் அலட்சியப் போக்கையே கடைப்பிடிக்கிறது.

ஆஸ்திரேலியாவில் வட இந்தியர்கள் தாக்கப்பட்டால் அலறித் துடிக்கும் இந்திய அரசின் இதயம், தாக்கப்படுபவன் தமிழன் என்றால் மௌனமாகிவிடுகிறது.

கருணாநிதியோ தனது குடும்ப நலனுக்காக தமிழர்களின் நலன், அவர்களின் எதிர்காலம் எல்லாவற்றையும் காவு கொடுத்துவிட்டார்.

இப்போதைக்கு, தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம், மறுமலர்ச்சி கண்டிப்பாகத் தேவை என்பதுதான் என்னுடைய கருத்து. அதன் பிறகுதான், தமிழீழத்தைப் பற்றிய விவாதங்கள் குறித்து நாம் பேச முடியும்! என்றார்.


Back to top Go down
 
பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி வழங்கிய செவ்வி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு
» மட்டக்களப்பில் மூடப்பட்டுவரும் துணை ஆயுதக் குழுக்களின் முகாம்கள்.
»  குமரன் பத்மநாதன் டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக செவ்வி பாகம் 1
» குமரன் பத்மநாதன் டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக செவ்வி பாகம் 2

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: செய்திகள் :: பிரபலங்களின் ஆய்வு /சந்திப்பு-
Jump to: